இலக்குவன் 'அது மாயமான்' எனல்

3287. ஆண்டு, அங்கு,
     இளையான் உரையாடினனால்,
'வேண்டும் எனலாம் விழைவு
     அன்று இது' எனா;
'பூண் துஞ்சு பொலங்
     கொடியோய்! அது நாம
காண்டும்' எனும் வள்ளல்
     கருத்து உணர்வான்.

    வேண்டும் எனலாம் - சீதை விரும்பிக் கேட்கின்ற தன்மையினால்;
விழைவு அன்று இது - பொருத்தமான ஆசை அன்று இது; எனா! -
என்று கூறாது; 'பூண் துஞ்சு பொலங் கொடியோய் - அணிகலன்கள்
அழகுடன் பொருந்தும் பொற்கொடி போன்றவளே!; அது நாம் காண்டும் -
அந்த மானைக் காணலாம்; எனும் வள்ளல் கருத்து உணர்வான் - என்று
கூறும் இராமனுடைய சிந்தனைப் போக்கை உணர்ந்தவனாய்; இளையான் -
தம்பியாகிய இலக்குவன்; ஆண்டு அங்கு உரையாடினன் - அப்போது
அவ்விடத்துத் தன் கருத்தை உரைக்கலானான். ஆல் - அசை.

     கேட்டதைக் கொடுப்பவன் என்பதால் வள்ளல் என்றார். உரிய
சமயத்தில் இலக்குவன் குறுக்கிட்டான்.                             51