3288. | 'காயம், கனகம்; மணி, கால், செவி, வால்; பாயும் உருவோடு இது பண்பு அலவால்; மாயம் எனல் அன்றி, மனக் கொளவே ஏயும்? இறை மெய் அல' என்ற அளவே. |
'காயம் கனகம் - (அம்மானின்) உடல் பொன்னிறமாய் உள்ளது; கால் செவி வால் மணி - காலும், காதும், வாலும் மாணிக்க மயமாய் உள்ளன; பாயும் உருவோடு இது - வேகமாகப் பாய்ந்தோடும் வடிவோடு கூடிய இம்மான்; பண்பு அல - இயற்கைப் பண்போடு கூடியதன்று; மாயம் எனல் அன்றி - இது ஒருவகை மாயை என்று கருதுதலே அல்லாமல்; மனக் கொளவே ஏயும் - வேறு விதமாகக் கருதுதல் பொருந்துமோ?; இறை - என் தலைவனே; மெய் அல - எவ்வகையிலும் இது உண்மையானது அன்று; என்ற அளவே - என இலக்குவன் கூறும் அளவில்.... (அடுத்த செய்யுளில் பொருள் முடிவுறும்). 52 |