இராமன் பதிலுரை 3289. | நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம் பல் ஆயிரம்கோடி பரந்துளதால்; இல்லாதன இல்லை-இளங்குமரா! |
இளங்குமரா - இளமையுடைய தம்பி!; நேர்மையினால் வல்லாரும் - முறையான அறிவிலே திறமை சான்றவரும்; நில்லா உலகின் நிலை உணர்ந்திலர் - நிலையில்லா உலகின் தன்மை முற்றும் அறிந்ததில்லை; மன் உயிர்தாம் - வாழும் நிலை பெற்ற உயிரினங்களோ எனில்; பல் ஆயிரம் கோடி பரந்துளது - எண்ணிலாக் கோடிகளாய் விரிந்து பரந்து உள்ளன; இல்லாதன இல்லை - இவ்வுலகில் இல்லாதவை என்று (நம் அறிவை மட்டும் வைத்து) எவற்றையும் விலக்கிக் கூற முடியாது' (என்றான் இராமன்); ஆல் - அசை. உலகின் இயற்கை முழுவதையும் யாரும் கணித்தறிந்ததில்லை. அதிலும் நீயோ இளங்குமரன், ஆனபடியால் புதிய ஒன்றை இல்லையென மறுத்தல் பொருந்தாது என்றான் இராமன். 53 |