3290. | 'என் என்று நினைத்தது, இழைத்து உளம்? நம் கன்னங்களின் வேறு உள காணுதுமால்; பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ் அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ? |
உளம் இழைத்து - மனத்தினால் சிந்தித்து; என் என்று நினைத்தது- என்ன முடிவுக்கு வந்தாய்?; நம் கன்னங்களின் - நம் செவிகளில் (அன்றாடம்); வேறு உள காணுதும் - புதிது புதிதான செய்திகள் கேட்கின்றோமே; பொன்னின் ஒளி மேனி பொருந்திய - தங்க நிறம் உடலிற் பொருந்திய; ஏழ் அன்னங்கள் - ஏழு அன்னப் பறவைகள்; பிறந்தது அறிந்திலையோ? - தோன்றிய செய்தியை நீ கேட்டதில்லையா?" (ஆல் - அசை) புராண மரபில் ஏழு பொன் அன்னங்களின் செய்தி கூறப்படுதலை இராமன் நினைவு கூர்ந்தான். (மானச சரோவரத்தின் கரையில் யோகாப்பியாசம் செய்த பரத்துவாச புத்திரர் எழுவர் ஒழுக்கம் குன்றியதால் தங்கள் பயிற்சி கைகூடாமல் மரணமுற்றனர். பின்னர்க் குருக்ஷேத்திரத்தில் கௌசிக புத்திரர்களாய்ப் பிறந்தனர். கார்க்க முனி சீடர்களாய் இருந்தபோது அவனுடைய காமதேனுப் பசுவைக் கொன்று தின்றனர். ஆயினும் முன்னோர்க்கு உரிய பிதிர்க்கடன் செய்தமையால் பல்வேறு பிறவிகளில் வேடராய், விலங்காய், சக்கரவாகப் பறவையாய், அன்னப் பறவையாய் மாறி மாறிப் பிறந்தனர். கடைசியில் முக்தி பெற்றனர் என்பர். பத்ம கர்ப்பம், அரவிந்தாட்சம், சீர கர்ப்பம், சுலோசனம், பிந்து, சுபிந்து, ஹைமகர்ப்பம் என அன்னங்கள் பெயர் பெற்றன). 54 |