3291.'முறையும் முடிவும் இலை, மொய்
     உயிர்' என்று,
இறைவன் இளையானொடு
     இயம்பினனால்;
'பறையும் துணை, அன்னது பல்
     நெறி போய்
மறையும்' என,
     ஏழை வருந்தினளால்.

     'முறையும் முடிவும் - இப்படித்தான் இருக்க வேண்டுமென்னும்
முறையும் முடிவும்'; மொய் உயிர் - உலகத்தில் தோன்றிய உயிர்களுக்கு;
இலை - கட்டுத்திட்டம் ஒன்றும் கிடையாது'; என்று - என; இறைவன் -
தலைவனாகிய இராமன்; இளையானொடு இயம்பினன் - தம்பியிடம்
கூறினான்; ஏழை - (இதனிடையே) சீதையோ; 'பறையும் துணை -
இவ்வாறு பேசி்க் கொண்டிருக்கிற நேரத்திற்குள்ளாக; அன்னது -
அப்பொன் மான்; பல்நெறி போய் மறையும் - காட்டு வழிகள்
பலவற்றுள்ளும் சென்று மறைந்து விடுமே'; என வருந்தினள் - எனப்
(பேதமையால்) வருந்தலானாள். (ஆல் - அசை)

     அறியாமை சீதைக்கு ஏற்பட்டிருப்பதால் ஏழை என்றார்.         55