இராமன் சீதையோடு சென்று மானைக் காணுதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3292. அனையவள் கருத்தை உன்னா, அஞ்சனக்
     குன்றம் அன்னான்,
'புனையிழை! காட்டு அது' என்று
     போயினான்; பொறாத சிந்தைக்
கனை கழல் தம்பி பின்பு சென்றனன்;
     கடக்க ஒண்ணா
வினை என வந்து நின்ற மான் எதிர்
     விழித்தது அன்றே.

    அனையவள் கருத்தை உன்னா - சீதையின் இவ் வருத்தச்
சிந்தனையை எண்ணி; அஞ்சனக் குன்றம் அன்னான் - நீல மலை
போன்ற இராமன்; 'புனையிழை - நல்லணி புனைந்தவளே!; அது காட்டு'
என்று போயினான் -
அம்மானை எனக்குக் காட்டுவாயாக' என்று
புறப்படலானான்; பொறாத சிந்தை - இதனை ஏற்றுக் கொள்ள மனமின்றி;
கனைகழல் தம்பி - ஓசை செய்யும் வீரக் கழலணிந்த தம்பி இலக்குவனும்;
பின்பு சென்றனன் - அவர்கள் பின்னே சென்றான்; கடக்க ஒண்ணா
வினை என -
தாண்டிச் செல்ல முடியாத விதியினைப் போல; வந்து நின்ற
மான் -
வந்து நின்ற மாயமான்; எதிர் விழித்தது - எதிரில் வந்து காட்சி
தந்தது. (அன்றே-அசை).

     விதி, தவறாமல் பயனளிப்பது போன்று, மாயமான் தீமை விளைவிக்கத்
தவறாது வந்து நின்றது, எனினும் கவனமுள்ள தம்பி பின்தொடர்ந்தான்.  56