3294.'என் ஒக்கும் என்னல்
     ஆகும்? இளையவ! இதனை நோக்காய்;
தன் ஒக்கும் உவமை அல்லால், தனை
     ஒக்கும் உவமை உண்டோ?
பல், நக்க தரளம் ஒக்கும்; பசும்
     புல்மேல் படரும் மெல் நா
மின் ஒக்கும்; செம் பொன், மேனி;
     வெள்ளியின் விளங்கும் புள்ளி.

    'இளையவ! - தம்பியே!; இதனை நோக்காய் - இம்மானை
நன்கு பாராய்; என் ஒக்கும் என்னல் ஆகும் - எதனை இதனோடு
ஒப்பிட்டுக் கூற முடியும்?; தன் ஒக்கும் உவமை அல்லால் -
தனக்குத் தானே ஒப்பாக உவமை கூறத்தக்கதே அல்லாமல்; தனை
ஒக்கும் உவமை உண்டோ? -
இதனைப் போன்ற ஒன்று என்று கூற
வேறு பொருள் உலகில் ஏது?; பல் - இம் மானின் பற்கள்; நக்க
தரளம் ஒக்கும் -
சிரிக்கின்ற முத்துக்கள் போன்றுள்ளன; பசும்புல்
மேல் படரும் மெல் நா -
பச்சைப் புற்களின் மீது செல்லும் இதன்
மெல்லிய நாக்கு; மின் ஒக்கும் - மின்னலைப் போன்றுள்ளது; மேனி
செம் பொன் -
உடலோ சிவந்த பொன்னைப் போன்றுள்ளது; புள்ளி
வெள்ளியின் விளங்கும் -
உடல் மேற் புள்ளிகளோ வெள்ளி
போன்றுள்ளது (என்றான் இராமன்)

     முன் அடியில் உவமை கூற முடியாது என்றவர் கடைசி அடிகளில்
பல்வேறு உவமைகளால் உறுப்புக்களை வருணித்தார். உறுப்புக்களுக்கு
உவமை கூற முற்படினும் முழுமையான தோற்றப் பொலிவிற்கு அத்தகு
பொருள் ஏதும் இன்மையின் உவமை கூற முடியாது என்றார் எனக்
கொள்க.                                                    58