3295.'வரி சிலை மறை வலோனே! மான்
     இதன் வடிவை, உற்ற
அரிவையர், மைந்தர், யாரே
     ஆதரம் கூர்கிலாதார்?
உருகிய மனத்த ஆகி, ஊர்வன,
     பறப்ப, யாவும்
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின்
     வீழ்வ காணாய்!'

    'வரிசிலை மறை வலோனே - கட்டமைந்த வில்லின்கலையாகிய
வேதத்தில் வல்லவனே!; மான் இதன் வடிவை - இம்மானின் உருவத்தை;
உற்ற - நெருங்கிக் கண்ட; அரிவையர் மைந்தர்- பெண்களானாலும்
ஆண்களானாலும்; யாரே ஆதரம்கூர்கிலாதார்? - (இதனிடம்) ஆசை
கொள்ளாதவர் யாராவது இருக்கமுடியுமா?; உருகிய மனத்த ஆகி -
உள்ளம் கரைந்துருகுவனவாகி;ஊர்வன, பறப்ப யாவும் - ஊர்ந்தும்
பறந்தும் செல்லும் அனைத்துவிலங்குகளும் பறவைகளும்; விரிசுடர்
விளக்கம் கண்ட -
எரியும்நெருப்புச் சுடரின் வெளிச்சம் பார்த்து;
விட்டிலின் வீழ்வ - விழும்விட்டில் பூச்சிகளைப் போல் விரும்பி அம்
மானைச் சூழ்வதை;காணாய் - நீ பாராய் (என்றான் இராமன்)

     உயிரினங்கள் அனைத்தும், ஆண் பெண் ஆன மானுடரும் இம்
மானைக் கண்டு மயங்குவதால் சீதையின் மயக்கத்தில் வியப்பில்லைஎன
இராமன் இலக்குவனுக்கு அமைதி காட்டுகின்றான்.                   59