3296. | ஆரியன் அனைய கூற, அன்னதுதன்னை நோக்கி, 'சீரியது அன்று இது' என்று, சிந்தையில் தெளிந்த தம்பி, 'காரியம் என்னை, ஈண்டுக் கண்டது கனக மானேல்? வேரி அம் தெரியல் வீர! மீள்வதே மேன்மை' என்றான். |
ஆரியன் - மேன்மை மிக்க இராமன்; அனைய கூற - இவ்வாறு எடுத்துக் கூறவும்; அன்னது தன்னை நோக்கி - அந்த மானை உற்றுப் பார்த்து; 'இது சீரியது அன்று - இம்மான் இயற்கையானது அன்று'; என்று சிந்தையில் தெளிந்த தம்பி - என்று தன் மனத்தில் உறுதி கொண்ட தம்பி இலக்குவன்; வேரி அம் தெரியல் வீர - மணம் கமழ்கின்ற மாலையணிந்த வீரனே; ஈண்டு கண்டது கனக மானேல் - இங்குக் காணப்படுவது பொன்மானாக இருக்கிற தென்றாலும்; என்னை காரியம்? - அதனால் நமக்கு என்ன பயன்?; மீள்வதே மேன்மை - அதனை விட்டு நீங்கி வருவதே மேலான செயல்; என்றான் - என்று கூறினான். அது பொன்மயமான மான் என்பதால் நமக்கு என்ன பயன்என்ற இலக்குவன் வினாவில், மாயையிலிருந்து விரைவி்ல் இராமன்மீள வேண்டுமே என்ற கவலை மேலோங்கி நிற்கின்றது. 60 |