3297. அற்று அவன் பகராமுன்னம்,
     அழகனை, அழகியாளும்,
'கொற்றவன் மைந்த! மற்றைக்
     குழைவுடை உழையை, வல்லை
பற்றினை தருதி ஆயின், பதியிடை
     அவதி எய்தப்
பெற்றுழி, இனிது உண்டாடப் பெறற்கு
     அருந் தகைமைத்து' என்றாள்.

    அற்று அவன் பகரா முன்னம் - இவ்வாறு இலக்குவன் கூறி
முடிக்கும் முன்; அழகனை - (ஒப்பற்ற) பேரழகனான இராமனிடம்;
அழகியாளும் - கட்டழகியான சீதையும்; 'கொற்றவன் மைந்த -
வெற்றியில் வல்ல தசரத குமாரனே; மற்றைக் குழைவுடை உழையை
-
மனத்தை நெகிழ்விக்கும் அந்த எழிலுடைய மானை; வல்லை
பற்றினை தருதியாயின் -
விரைவில் பிடித்துத் தருவாயானால்;
பதியிடை அவதி எய்தப்பெற்றுழி - அயோத்திக்கு வனவாசக் காலம்
முடிந்து செல்லுங்கால்; இனிது உண்டாட - மகிழ்வுடன்
விளையாடுதற்கு; பெறற்கு அருந் தகைமைத்து - கிடைத்தற்கு அரிய
பொருளாக இருக்கும்; என்றாள் - என்று கூறினாள்.

     'இம்மானால் யாது பயன்' என்ற இலக்குவன் வினாவுக்கு விடை
கூறினாற்போல் சீதையின் பேச்சு அமைந்தது. வனவாசம் முடிந்து
அயோத்தியில் செல்லும்போது இம் மான் எனக்கு விளையாட்டுத்
துணையாக இருக்கும் என்றாள். இக்கூற்று இராமன் பால் அருள்
சுரக்கும்படி அமைந்தது.                                        61