மானைப்பற்றி இராமலக்குவர் மாறுபாடு கொள்ளல் 3298. | ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரைசெய்ய, ஐயன், 'செய்வென்' என்று அமைய, நோக்கத் தெளிவுடைத் தம்பி செப்பும் 'வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த கைதவ மான் என்று, அண்ணல்! காணுதி கடையின்' என்றான். |
ஐய நுண் மருங்குல் நங்கை - 'உண்டோ, இல்லையோ' என ஐயுறத்தக்க சிறிய இடையை உடைய சீதையாகிய நங்கை; அஃது உரை செய்ய - இவ்வாறு தன் ஆசையை வெளியிட்டுப் பேச; ஐயன்- தலைவனாகிய இராமன்; செய்வென் என்று அமைய - இதோ பிடித்துத் தருகிறேன் என்று முடிவு கூற; நோக்கத் தெளிவுடைத் தம்பி - சிந்தனையில் தெளிவுடைய தம்பி இலக்குவன்; செப்பும் - தமையனிடம் கூறலானான்; 'அண்ணல்! - என் தலைவனே; வெய்ய வல்லரக்கர் - கொடுமையும் வன்மையும் உடைய அரக்கர்கள்; வஞ்சம் விரும்பினார் - வஞ்சனை செய்ய விரும்பியவராய்; வினையின் செய்த - தந்திரத்தால் இயற்றித் தந்த; கைதவ மான் என்று - மாயமான், என்று; கடையின் காணுதி - முடிவில் உணர்ந்து கொள்வாய்; என்றான் - என்று (எச்சரித்துக்) கூறினான். இலக்குவனின் விடாப்பிடியான அறிவுக் கூர்மையும் கடமை உணர்வும் இங்குப் புலனாகின்றன. ஐய நுண் இடை என்பதற்கு மிகவும் சிறிய இடை எனவும் பொருள் கொள்ளலாம்; ஐய எனின் நுட்பம் என்று பொருள்படும். 62 |