3299.'மாயமேல், மடியும் அன்றே
     வாளியின்; மடிந்தபோது
காய் சினத்தவரைக் கொன்று கடன்
     கழித்தோமும் ஆதும்;
தூயதேல், பற்றிக் கோடும்; சொல்லிய
     இரண்டின் ஒன்று
தீயதே? உரைத்தி' என்றான்-தேவரை
     இடுக்கண் தீர்ப்பான்.

    'மாயவேல் - நீ கூறுவது போல் மாயமானாக இருக்குமாகில்;
வாளியின் மடியும் அன்றே - என் அம்புக்கு அது இரையாகும்
அல்லவா?; மடிந்த போது - அவ்வாறு மரணமுறும் போது; காய்
சினத்தவரைக் கொன்று -
கொடிய சினம் கொண்ட அரக்கரை
அழித்து; கடன் கழித்தோமும் ஆதும் - நம் கடமையை
ஆற்றினவர்களும் ஆவோம்; (அன்றி); தூயதேல் - உண்மையான
மானாக இருக்குமாகில்; பற்றிக் கோடும் - பிடித்துக் கொண்டு
வருவோம்; சொல்லிய இரண்டின் ஒன்று - இப்போது நான் கூறிய
இரண்டில் ஏதேனும் ஒன்றை; தீயதே - தீமை என்று கூற முடியுமா?;
உரைத்தி - சொல்லுவாயாக; என்றான் - என்று சொன்னான்;
தேவரை இடுக்கண் தீர்ப்பான் - வானவர் துன்பத்தையும் அழிக்க
வல்ல இராமன்.

     மாயமான், மெய்யான மான் என்ற இரண்டு நிலையிலும்மானைப்
பிடிப்பதால் தீமை இல்லை என உரைத்தான் இராமன். மாயமான் சாக்கிட்டு
அவதார நோக்கம் நிறைவெய்தப் போவதால்,'தேவரை இடுக்கண் தீர்ப்பான்'
என்று இராமனைக் குறித்தார்.             63