3300. | 'பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம்; பிடித்த மாயம் என் என்றும் தெளிதல் தேற்றாம்; யாவது ஈது என்றும் ஓராம்; முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல், பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ் உடைத்தாம் அன்று' என்றான். |
'பொன் நின்ற வயிரத் தோளாய் - பொன் போல் அழகிய வைரம் பாய்ந்த தோள்களை உடையவனே; பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் - இம் மாயமானை ஏவிப் பின்னே நிற்பவர் யாவர் என்றும் தெரியவில்லை; பிடித்த மாயம் - அவர்கள் கைக் கொண்டுள்ள மாயை; என் என்றும் தெளிதல் தேற்றாம் - எத்தகையது என்றும் உணர இயலவில்லை; யாவது ஈது என்றும் ஓராம் - இம் மான் தான் எத்தகையது என்றும் எண்ணிப் பார்க்க முடியவில்லை (அதனால்); முன் நின்ற முறையின் நின்றார் - நமக்கு முன்னே நீதி நெறியில் நின்ற பெரியோர்கள்; முனிந்து உள - வெறுத்து ஒதுக்கிய; வேட்டம் முற்றல் - வேட்டைத் தொழிலில் ஈடுபடுதல்; புகழ் உடைத்தாம் அன்று - புகழ் தரும் செயல் அன்று'; என்றான் - என்று (இலக்குவன்) கூறினான். வேறு காரணங்களுக்கு இசையாத இராமனிடம் முன்னோர்வெறுத்த வேட்டைத் தொழில் வேண்டாம் என்று புதிய உத்தியைஇலக்குவன் கையாளுகின்றான். சாது விலங்குகளை வேட்டையாடுதல்பெரியோர்களால் விலக்கப்பட்டது; ஆதலின் இலக்குவன் இம்மானுக்குஇடர் செய்ய வேண்டா என்று பேசிப் பார்க்கிறான்.64 |