3301. | 'பகையுடை அரக்கர் என்றும், பலர் என்றும், பயிலும் மாயம் மிகையுடைத்து என்றும், பூண்ட விரதத்தை விடுதும் என்றல் நகையுடைத்து ஆகும் அன்றே? ஆதலின் நன்று இது' என்னா, தகையுடைத் தம்பிக்கு, அந் நாள், சதுமுகன் தாதை சொன்னான். |
'பகையுடை அரக்கர் என்றும் - நமக்குப் பகைவரான அரக்கர் பெயரைக் கூறியும்; பலர் என்றும் - அவர்கள் எண்ணிக்கையால் பலர் என்று பயமுறுத்தியும்; பயிலும் மாயம் மிகையுடைத்து என்றும்- அவர்களின் மாயத் தந்திரங்கள் மிகுதியானவை என்று கூறியும்; பூண்ட விரதத்தை - அவர்களை அழிக்க நாம் கொண்ட விரதத்தை; விடுதும் என்றல் - விட்டு விடக் கருதுதல்; நகை உடைத்து ஆகும் அன்றே - பிறர் கேட்டுச் சிரிக்கத் தக்கதாகி விடும், அல்லவா?; ஆதலின் இது நன்று - ஆகையால், இம்மானைப் பிடிக்கும் செயலில் பிழையில்லை; என்னா - என்று; அந்நாள் - அப்போது; சதுமுகன் தாதை - பிரமனின் தந்தையாகிய இராமன்; தகையுடைத் தம்பிக்கு - பெருமைமிக்க தம்பி இலக்குவனுக்கு; சொன்னான் -எடுத்துரைத்தான். இராமனும் தன் கொள்கையில் பின் வாங்காது இலக்குவனிடம், நம் விரதத்தினின்றும் மாறி நிற்றல் ஆகாது என்றான். 65 |