3302. | 'அடுத்தவும் எண்ணிச் செய்தல், அண்ணலே! அமைதி அன்றோ? விடுத்து, இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும், வில்லால் தொடுத்த வெம் பகழி தூவித் தொடர்ந்தனென், விரைந்து சென்று, படுக்குவென்; அது அன்று ஆயின், பற்றினென் கொணர்வென்' என்றான். |
'அண்ணலே! - தலைமை மிக்கவனே; அடுத்தவும் -செய்யத்தக்க எச் செயலையும்; எண்ணிச் செய்தல் - ஆராய்ந்துசெய்தல்; அமைதி அன்றோ - பொருத்தம் உடையது அல்லவா?(அது நிற்க); விடுத்து இதன்பின் நின்றார்கள் - இம்மானை அனுப்பிஇதன் பின் ஒளிந்து நிற்போர்; பலர் உளர் எனினும் - பலராகஇருந்த போதிலும்; வில்லால் தொடுத்த வெம் பகழி தூவி -வில்லில் தொடுத்த கொடிய அம்புகளை ஏவி; தொடர்ந்தனென் -பின் தொடர்வேன்; விரைந்து சென்று - மேலும் வேகமாய்ப் போய்;படுக்குவென் - அவர்களை அழிப்பேன்; அது அன்று ஆயின் -இல்லையெனில்; பற்றினென் கொணர்வென் - மானைக் கைப்பற்றிஇழுத்து வருவேன்; என்றான் - என்று இலக்குவன் தெரிவித்தான். 'மானின் பின் தாங்கள் செல்வதற்குப் பதில் நானே சென்றுவென்று வருவேன்' என இலக்குவன் வேண்டுகின்றான். 66 |