3303. ஆயிடை, அன்னம் அன்னாள்,
     அமுது உகுத்தனைய செய்ய
வாயிடை, மழலை இன்சொல்
     கிளியினின் குழறி, மாழ்கி,
'நாயக! நீயே பற்றி
     நல்கலைபோலும்' என்னா,
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு
     சீறிப் போனாள்.

    ஆயிடை - இப்பேச்சுக்களின் இடைப்புகுந்து; அன்னம்அன்னாள் -
பேடை அன்னம் போன்ற சீதை; மாழ்கி -வருத்தமுற்று; அமுது
உகுத்தனைய -
அமுதம் சிந்தினாற் போன்று;செய்ய வாயிடை மழலை
இன்சொல் -
சிவந்த வாயில் இனியமழலை போலும் சொற்களை;
கிளியினின் குழறி - கிளி மொழிவதுபோல் கொஞ்சிக் கூறி; 'நாயக - என்
நாதனே; நீயே பற்றி நல்கலைபோலும் - இம்மானை நீயே பிடித்துத்
தரமாட்டாயா; என்னா -என்று (ஊடல் கொண்டு); சேயரிக் குவளை -
சிவந்த வரிகளைஉடைய குவளை மலர் போன்ற கண்களில்; முத்தம்
சிந்துபு -
கண்ணீர் முத்துக்கள் சிந்த; சீறிப் போனாள் - கோபம் கொண்டு
செல்லத் தொடங்கினாள்.

     இலக்குவன் கருத்தைத் தன் ஊடற் கோலத்தால் இராமபிரானிடம்
மறுத்துக் கூறுகின்றாள் சீதை.                                    67