இளையவனை நிறுத்திவிட்டு இராமன் மானைத் தொடர்தல்

3304.போனவள் புலவி நோக்கி, புரவலன்,
     'பொலன் கொள் தாராய்!
மான் இது நானே பற்றி, வல்லையின்
     வருவென், நன்றே;
கான் இயல் மயில் அன்னாளைக்
     காத்தனை இருத்தி' என்னா,
வேல் நகு சரமும், வில்லும்
     வாங்கினன் விரையலுற்றான்.

    போனவள் புலவி நோக்கி - அவ்வாறு சென்ற சீதையின்
ஊடலைப் பார்த்து; புரவலன் - அனைவரையும் காத்தல் வல்ல
இராமன், (இலக்குவனிடம்); 'பொலன் கொள் தாராய் -
பொன்மயமான மலர் மாலை புனைந்தவனே; மான் இது நானே பற்றி-
இம் மானை நானே பிடித்துக் கொண்டு; வல்லையின் வருவென்
நன்றே -
விரைவில் நன்கு வந்து விடுவேன்; (அதுவரை); கான்
இயல் மயில் அன்னாளை -
கானகத்து மயில் போன்ற சீதையை;
காத்தனை இருத்தி - நீ காவல் காத்து இருப்பாயாக; என்னா -
என்று கூறி; வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் - வேல்
போன்ற கூரிய அம்புகளையும் வில்லையும் எடுத்துக் கொண்டு;
விரையல் உற்றான் - வேகமாகச் செல்லலானான்.

     சீதையின் ஊடலைத் தவிர்க்கும் பொருட்டு இராமன் தானே
புறப்பட்டான். மேகம் கண்டு களிக்கும் மயில் போல, நீல மேக
வடிவினனான இராமனைக் கண்டு களிக்கும் மயில் சீதை என்பதாம்.
கோப்பெருந்தேவி ஊடல் பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் அவலம்
விளைத்தது; சீதையின் ஊடல் சீதைக்கும் இராமனுக்கும் அவலம்
விளைத்தது.                                                68