3306. | மந்திரத்து இளையோன் சொன்ன வாய்மொழி மனத்துக் கொள்ளான்; சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி, சிந்துரப் பவளச் செவ் வாய் முறுவலன், சிகரச் செவ்விச் சுந்தரத் தோளினான், அம் மானினைத் தொடரலுற்றான். |
மந்திரத்து இளையோன் - எண்ணிச் சிந்திக்க வல்ல தம்பி இலக்குவன்; சொன்ன வாய்மொழி - எடுத்துக் கூறிய வாய்மை மிக்க மொழியை; சிகரச் செவ்விச் சுந்தரத் தோளினான் - மலையென உயர்ந்த அழகிய தோள்களை உடைய இராமன்; மனத்துக் கொள்ளான் - தன் மனத்தில் ஏற்றுக் கொள்ளாதவனாய்; சந்திரற்கு உவமை சான்ற - பூரணச் சந்திரனுக்கு உவமை கூறத்தக்க; வதனத்தாள் சலத்தை நோக்கி - முகத்தை உடைய சீதையின் கோபத்தையே எண்ணியவனாய்; சிந்துரப் பவளச் செவ்வாய் முறுவலன் - சிந்தூரமும் பவளமும் போன்ற சிவந்த இதழ்களில் புன்முறுவல் பூண்டவனாய்; அம்மானினைத் தொடரல் உற்றான் - அந்த மானைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினான். வாய்மொழி - வாய்மை ஆகிய மொழி. பண்புத் தொகை. வாயின் மொழி எனப் பொருள் கொண்டால் வேற்றுமைத் தொகை. இலக்குவனின் எச்சரிக்கையும், சீதையின் கோபமும்இராமனுக்குச் சிரிப்பைத் தந்தன, அவன் வீரனாகையால். 70 |