3308. நீட்டினான், உலகம் மூன்றும்
     நின்று எடுத்து அளந்த பாதம்;
மீட்டும் தாள் நீட்டற்கு, அம்மா! வேறும்
     ஓர் அண்டம் உண்டோ?
ஓட்டினான், தொடர்ந்த தன்னை,
     ஒழிவு அற நிறைந்த தன்மை,
காட்டினான் அன்றி, அன்று, அக்
     கடுமை யார் கணிக்கற்பாலார்?

    (இராமன் அந்த மாயமானைத் தொடருவதற்காக); உலகம்
மூன்றும் அளந்த பாதம் -
மூவுலகையும் அளந்த திருவடிகளை;
நின்று எடுத்து நீட்டினான் - எடுத்து நீள வைத்தான்; மீட்டும் தாள்
நீட்டற்கு வேறும் ஓர் அண்டம் உண்டோ? -
மேலும் அவன்
அளப்பதற்குரிய உலகம் வேறு ஒன்று இருக்கிறதோ?; ஓட்டினான் -
அத்தகைய பாதங்களால் (மானைத்) துரத்தினான்; தொடர்ந்த தன்னை
-
அவ்வாறு துரத்திய பெருமான் மானைத் தொடர்ந்து தனது; ஒழிவு
அற நிறைந்த தன்மை -
நீக்கமற எங்கும் நிறைந்த நிலையினை;
காட்டினான் - (எங்கும் திரிந்ததால்) காட்டி நின்றான்; அன்றி -
இதுதான் உண்மையே அன்றி; அன்று அக்கடுமை - அன்று
அம்மான் சென்ற வேகத்தின் கடுமையை; கணிக்கற்பாலார் யார்? -
கணக்கிட வல்லவர் யாவர்?

     வாமனனாக இருந்து திருவிக்கிரமாவதாரம் எடுத்த காலை எல்லா
உலகங்களிலும் கால் நீட்டிய திருமால், இன்று இந்த மான் காரணமாக
எல்லா இடங்களிலும் தொடர்ந்து காட்சி தந்தான். அதனால் எங்கும்
நிறை இறைவன் எனக் காட்டிக் கொண்டான். அம்மா - அசை;
வியப்பிடைச் சொல்லுமாம்.                                     72