3309. | குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும் மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா! |
குன்றிடை இவரும் - அந்த மான் மலைகளின் மீது ஏறும்; மேகக் குழுவிடைக் குதிக்கும் - வான்முகில்களிடையே சென்று பாயும்; கூடச் சென்றிடின் அகலும் - அருகில் சென்றால் தொலைவில் விலகி ஓடும்; தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் - அருகில் செல்லத் தாமதித்தால் தீண்டுதற்கு அண்மையாக வந்து நிற்கும்; நின்றதே போல நீங்கும் - (அருகில் சென்றால்) நின்றாற் போல் தோன்றியபடி தொலைவில் விலகி நீங்கும்; நிதி வழி நேயம் நீட்டும் - கொடுத்த பணத்துக்கு ஏற்றபடி அன்பைப் பகிர்ந்து தரும்; மன்றல் அம் கோதை மாதர் - மணம் கமழ் மாலை சூடிய விலை மகளிர்; மனம் எனப் போயிற்று - (ஒரு வழி நில்லாத) மனத்தைப் போல் சென்றது (அம்மா - வியப்புக் குறித்த இடைச் சொல்). எங்கும் நில்லாமல் பாயும் மானின் பாய்ச்சலை நிதி வழி நேயம் நீட்டும் விலை மகளிர் மனம் என உவமித்துக் கூறினார். 73 |