3310. | 'காயம் வேறு ஆகி, செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே? ஏயுமே; என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே; ஆயுமேல் உறுதல் செல்லாம்; ஆதலால், அரக்கர் செய்த மாயமே ஆயதே; நான் வருந்தியது' என்றான் - வள்ளல். |
'காயம் வேறு ஆகி - (இந்த மானின்) வடிவம் மானாக வேறுபட்டிருந்தாலும்; செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே - இதன் செயல்களோ மானின் இயல்பிலிருந்து மாறுபட்டதாய்த் தோன்றுகின்றன; என்னின் முன்னம் - எனக்கு முன்னே; இளவற்கு எண்ணமே உண்டே - தம்பி இலக்குவனுக்கு இது குறித்த சிந்தனை தோன்றியதில் நியாயம் உண்டு தானே; ஏயுமே - (அவன் எண்ணம்) பொருத்தமாகத்தான் இருக்கிறது; ஆயுமேல் - நன்றாக நானும் ஆராய்ந்திருந்தால்; உறுதல் செல்லாம் - இங்கு வந்திருக்க மாட்டேன்; ஆதலால் - எனவே; நான் வருந்தியது - நான் இப்போது வருந்தி உணர்வது; அரக்கர் செய்த மாயமே ஆயதே - இராக்கதர் மாயம் செய்ததன் விளைவையே; என்றான் வள்ளல் - என அருள் வள்ளலாகிய இராமன் எண்ணினான். மானின் இயல்புக்கு மாறாகத் தந்திரம் வல்லதாக இம் மாயமான் இயங்குகிறது. ஒரு கட்டத்தில் களைப்புற வேண்டிய விலங்குஇராமனை இழுத்துக் கொண்டு தொலை தூரம் வந்து விட்டது.இவற்றால் இராமன் மனம் சிந்திக்கலாயிற்று. 74 |