இராமன் அம்பால் மாரீசன் அலறி வீழ்தல்

கலிவிருத்தம்

3311.'பற்றுவான், இனி,
     அல்லன்; பகழியால்
செற்று, வானில் செலுத்தல்
     உற்றான்' என
மற்ற அம் மாய
     அரக்கன் மனக் கொளா,
உற்ற வேகத்தின்
     உம்பரின் ஓங்கினான்.

    'இனிப் பற்றுவான் அல்லன் - இனி (இராமன் என்னைப்)
பிடிக்க முயலமாட்டான்; பகழியால் செற்று - அம்பால் கொன்று;
வானில் செலுத்தல் உற்றான் - விண்ணில் செலுத்தக் கருதினான்';
என - என்று; மனக் கொளா - சிந்தையில் உணர்ந்தவனாய்; அம்
மாய அரக்கன் -
மாயை வல்ல அம்மாரீசன்; உற்ற வேகத்தின் -
மிக்க விரைவுடன்; உம்பரின் ஓங்கினான் - வானத்தில் உயரே
பாய்ந்தான். மற்ற - அசை.

     பிடிக்க எண்ணும் மனநிலை இராமனிடம் மாறிவிட்டதை மாரீசன்
அறிந்தான். இனி அம்பால் கொல்வான் என்று கணித்தான்.          75