3312. அக் கணத்தினில், ஐயனும்,
     வெய்ய தன்
சக்கரத்தின் தகைவு
     அரிது ஆயது ஒர்,
செக்கர் மேனிப்
     பகழி செலுத்தினான்-
'புக்க தேயம் புக்கு இன்
     உயிர் போக்கு' எனா.

    அக் கணத்தினில் - அந்த நொடிப் பொழுதில்; ஐயனும் -
இராமனும்; புக்க தேயம் புக்கு - எங்கே அந்த மான் செல்லுகிறதோ
அங்கெல்லாம் சென்று; இன் உயிர் போக்கு எனா - அதன் இனிய
உயிரை நீக்கு என்று ஆணையிட்டு; வெய்ய தன் சக்கரத்தின் -
கொடிய தன் சக்கராயுதம் போன்று; தகைவு அரிது ஆயது ஒர் -
தடுப்பதற்கு இயலாத ஒரு; செக்கர் மேனிப் பகழி - சிவந்த
அம்பினை; செலுத்தினான் - ஏவினான்.

     தப்ப முயலும் மாரீசனைத் தாக்கி அழிக்கும் இராமபாணம் ஏவப்
பெற்றது.                                                  76