3313.நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப்
பட்டது; அப்பொழுதே, பகு வாயினால்,
அட்ட திக்கினும், அப்புறமும் புக
விட்டு அழைத்து, ஒரு குன்று என வீழ்ந்தனன்.

    நெட்டிலைச் சரம் - நெடிய இலை வடிவம்  கொண்ட அவ்வம்பு;
வஞ்சனை நெஞ்சுறப் பட்டது - வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில்
சென்று தாக்கியது; அப்பொழுதே - அந்தக் கணமே; பகு வாயினால் -
பிளவுபட்ட வாயினால்; அட்டதிக்கினும் - எட்டுத் திசைகளிலும்;
அப்புறமும் புக - அதற்கு அப்பாலும் செல்லும்படி; விட்டு அழைத்து -
(சீதா லட்சுமணா) என்று இராமன் குரலில் கூவி; ஒரு குன்று என
வீழ்ந்தனன் -
மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம்
கொண்டு) வீழ்ந்தான்.

     தன் குரலை இராமன் குரலாக மாற்றி அழைத்து மடிந்தான்.மடியும்
போதும் வஞ்சனையால் 'சீதா லட்சுமணா' என்று குரல்கொடுத்தான்.    77