மாயம் உண்டு என மதித்து இராமன் பர்ண சாலைக்கு விரைதல்

3314.வெய்யவன், தன்
     உருவொடு வீழ்தலும்,
'செய்யது அன்று' எனச்
     செப்பிய தம்பியை,
ஐயன் வல்லன்; என்
     ஆர் உயிர் வல்லன்; நான்
உய்ய வந்தவன் வல்லன்'
     என்று உன்னினான்.

    வெய்யவன் - கொடியவனாகிய மாரீசன்; தன் உருவொடு
வீழ்தலும் -
தன் இயற்கை வடிவத்தோடு மரண முற்று வீழவும்;
செய்யது அன்று எனச் செப்பிய தம்பியை - இம்மான்
உண்மையானது அன்று என்று (நுனித்துணர்ந்து) கூறிய தம்பி
இலக்குவனைக் குறித்து; 'ஐயன் வல்லன் - என் இளவல்
திறமையாளன்; என் ஆர் உயிர் வல்லன் - என் இனிய உயிர்
போன்றவன் வல்லமை உடையவன்; நான் உய்ய வந்தவன் வல்லன்-
என்னைக் காக்க (என் தம்பியாக) வந்தவன் பேரறிவாளி'; என்று
உன்னினான் -
என்று இராமன் எண்ணினான்.

     வல்லன் என்று பன் முறை கூறியது இலக்குவன் வல்லமையை
உணர்ந்த வியப்பினால் என்க. தம்பியை ஐயன், ஆர் உயிர், உய்ய
வந்தவன் என்று பாராட்டிச் சிறப்பித்தான் இராமன்.                  78