3315. | ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அந் நீசன் மேனியை, நின்று உற நோக்கினான்; மாசு இல் மா தவன் வேள்வியின் வந்த மாரீசனே இவன் என்பதும் தேறினான். |
ஆசை நீளத்து - திசைகளின் எல்லை அளவும் எட்டும்படி; அரற்றினன் வீழ்ந்த - குரலெடுத்துக் கூவி மாண்ட; அந்நீசன் மேனியை- அக் கீழ்மகன் உடலை; நின்று உற நோக்கினான் - அருகில் நின்று உற்றுப் பார்த்தான் (இராமன்); மாசு இல் மாதவன் - குற்றம் இல்லாத பெருந்தவமுடைய விசுவாமித்திரனது; வேள்வியின் வந்த - யாக காலத்தில் வந்த; மாரீசனே இவன் - மாரீசனே இவன்; என்பதும் தேறினான் - என்பதனையும் உணர்ந்து கொண்டான். ஆசை - திக்க என்று பொருள்படும் வடசொல் இலக்குவன் உய்த்துணர்ந்த அரக்கன் மாயத்தை. இராமன் அனுபவித்தேஅறிந்தான். 79 |