3316. | 'புழைத்த வாளி உரம் புக, புல்லியோன், இழைத்த மாயையின், என் குரலால் இசைத்து அழைத்தது உண்டு; அது கேட்டு அயர்வு எய்துமால், மழைக் கண் ஏழை' என்று, உள்ளம் வருந்தினான். |
'புழைத்த வாளி - ஊடுருவிச் செல்லும் அம்பு; உரம் புக - தன் மார்பில் பட்டதும்; புல்லியோன் - இழிந்தவனாகிய மாரீசன்; இழைத்த மாயையின் - செய்த மாயத்தினால்; என் குரலால் இசைத்து - என் குரல் போன்ற குரலால் (சீதையையும் இலக்குவனையும்) கூவி; அழைத்தது உண்டு - அழைத்துள்ளான் அல்லவா?; அது கேட்டு் - அக்குரலைப் பிறழ உணர்ந்து; மழைக்கண் ஏழை - மழை போல் குளிர்ந்த கண்களை உடைய பேதை ஆகிய சீதை; அயர்வு எய்தும் - துன்பம் உறுவாள்'; என்று உள்ளம் வருந்தினான் - என்று மனம் நொந்தான் (இராமன்). ஆல்- அசை. மழைக் கண் - மழை போல் கண்ணீர் விடுகிற கண் என்றுமாம். 80 |