3317. | 'மாற்றம் இன்னது, "மாய மாரீசன்" என்று, ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது ஆற்றல் தேரும் அறிவினன்; ஆதலால், தேற்றுமால் இளையோன்' எனத் தேறினான். |
இளையோன் - தம்பி இலக்குவன்; ஏற்ற காலையின் - மானை எதிர் கொண்ட அளவிலே; மாய மாரீசன் என்று முன் உணர்ந்தான்- மாயை செய்தவன் மாரீசன் என்று முன்னமே அறிந்து சொன்னான்; எனது ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் - (இப்போதும்) என்னுடைய வலிமையை நன்கு தெளிவாக அறிந்திருப்பவனாதலால்; மாற்றம் இன்னது தேற்றும் - சீதைக்கு ஆறுதல் கூறி இக்குரலின் உண்மையை உணர்த்தியிருப்பான்; எனத் தேறினான் - என ஆறுதல் கொண்டு மனத் தெளிவு கொண்டான்; ஆல் - அசை. தம்பியின் அறிவையும், ஆறுதல் தரும் மாட்சியையும் போற்றி மகிழ்ந்தான். 81 |