கலிவிருத்தம் 3319. | சங்கு அடுத்த தனிக்கடல் மேனியாற்கு அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்; கொங்கு அடுத்த மலர்க்குழல் கொம்பனாட்கு இங்கு அடுத்த தகைமை இயம்புவாம். |
சங்கு அடுத்த தனிக்கடல் மேனியாற்கு - சங்குகள் பொருந்திய ஒப்பில்லாத கடல் போன்ற நீல நிறமுள்ள திருமேனியுடைய இராமனுக்கு; அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் - பொன் மானைத் தொடர்ந்து போன இடத்தில் நிகழ்ந்த தன்மையைச் சொன்னோம்; கொங்கு அடுத்த மலர்க்குழல் கொம்பனாட்கு - நறுமணம் பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற சீதைக்கு; இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் - இப்பன்னக சாலையில் நிகழ்ந்த தன்மையைச் சொல்லுவோம். இராமன் மேனிக்குக் கடல் உருவகம் 'கருங்கடலைச் செங்கனிவாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்' என வரும் (656). மேலும் 'மையோ மரகதமோ மறிகடலோ' எனவும் காணலாம் (1926). கொங்கு - தேனும் ஆம். தகைமை என்பதற்கு இராவணனால் பற்றப்பட்டமை எனவும் கூறுவர். மலர்க்குழல் கொம்பு - இல்பொருள் உவமை. இது காப்பியத்தின் முன் நிகழ்ச்சியைக் கூறி இனிக் காப்பியத் தலைவிக்கு வரப் போவதை உணர்த்தும் கவிக் கூற்றாம். 1 |