சீதையின் துயர்நிலை

3320. எயிறு அலைத்து முழை
     திறந்து ஏங்கிய,
செயிர் தலைக்கொண்ட,
     சொல் செவி சேர்தலும்,
குயில் தலத்திடை உற்றது
     ஒர் கொள்கையாள்,
வயிறு அலைத்து
     விழுந்து மயங்கினாள்.

    எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய - பற்களைக்
கடித்துக் கொண்டு குகை போன்ற தன் வாயைத் திறந்து (மாரீசன்)
முழங்கிய; செயிர் தலைக் கொண்ட சொல் செவி சேர்தலும் -
துன்பத்தை மேற்கொண்ட வார்த்தை சீதையின் காதில் பட்டவுடன்;
குயில் தலத்திடை உற்றது ஒர் கொள்கையாள் - ஒரு குயில்
(மரத்திலிருந்து தவறி) நிலத்தில் விழுந்தது போன்ற துயர்
அடைந்தவளாய்; வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் -
வயிற்றில் கையால் அடித்துக் கொண்டு தரையில் விழுந்து
மயக்கமடைந்தாள்.

     செயிர் - சினம், வஞ்சகம், துன்பம். செயிர் தலைக் கொண்ட
சொல் - இராமன் அம்பினால் பொன்மான் வடிவிலிருந்த மாரீசன்
வீழும் போது 'ஆ, சீதே! ஆ, இலக்குவா!' என இராமனின் குரலில்
கூறிய வஞ்சகம் நிறைந்த சொல் ஆம். துன்பம் எனப் பொருள்
கொண்டு இராமன் அம்பினால் சாகப் போகும் துன்பத்தில் விளைந்த
சொல் எனவுமாம். இராமன் குரல் போன்ற குரலில் ஆபத்து வெளிப்படவே
தரையிடை வீழ்ந்த குயில் போல் சீதை பெருந்துயருற்றாள். இது
இராமனிடமிருந்து சீதை பிரிக்கப்படுதற்கு முன்னறி குறியாக அமைகிறது.
துன்பமிகும் போது பெண்கள் வயிற்றிலடித்துக் கொண்டழுவதை முன்னர்ச்
சூர்ப்பணகைப் படலத்தில் 'வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து'
(2846) என வந்தது காட்டும். முழை - உவம ஆகுபெயர்.              2