'இராமனுக்குத் தீங்கு நேராது' என்று இலக்குவன் அறிவுறுத்தல் 3323. | 'எண்மை ஆர் உலகினில், இராமற்கு ஏற்றம் ஓர் திண்மையார் உளர் எனச் செப்பற்பாலரோ? பெண்மையால் உரைசெயப் பெறுதிரால்' என, உண்மையான், அனையவட்கு உணரக் கூறினான். |
எண்மை ஆர் உலகினில் - எளிமை பொருந்திய உலகத்தில்; இராமற்கு ஏற்றம் ஓர் திண்மை யார் உளர் எனச் செப்பற் பாலரோ - இராமனுக்கு மிக்க, சிறப்புடைய ஒரு வலிமையுடையவர் இருக்கிறார் எனக் கூறுவார்களா?; பெண்மையால் உரை செயப் பெறுதிரால் - நீர்உம் பெண்ணறிவால் இவ்வாறு கூறிவிட்டீர்; என உண்மையான் அனையவட்கு உணரக் கூறினான் - என்று உண்மை நிலையை உணர்ந்த இலக்குவன் அச் சீதைக்கு அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொன்னான். எண்மை - எளிமை. எண் பொருளவாகச் செலச் சொல்லி' (குறள். 424) என்ற தொடரால் அறியலாம். எண்ணிக்கையும் ஆம். உண்மையான் என்பது பொன்மானைப் பொய்ம் மானென்ற உண்மையை உணர்ந்தவனுமாம், என்றும் இராமனுக்கு உண்மையோடிருப்பவன் எனவும் ஆம். அனையவட்கு - அனை + அவட்கு எனக் கொண்டு தன் அன்னை போன்ற சீதைக்கு என்றும் உரைப்பர். இனி உலகத் தாய் எனவும் கூறுவர். 5 |