3324. | 'ஏழுமே கடல், உலகு ஏழும் ஏழுமே, சூழும் ஏழ் மலை, அவை தொடர்ந்த சூழல்வாய் வாழும் ஏழையர் சிறு வலிக்கு, வாள் அமர், தாழுமே இராகவன் தனிமை? தையலீர்! |
தையலீர்! - தாயே!; கடல் ஏழுமே - ஏழு கடல்களும்; உலகு ஏழும் ஏழுமே - பதினான்கு உலகங்களும்; சூழும் ஏழ் மலை - சூழ்ந்துள்ள ஏழு மலைகளும்; அவை தொடர்ந்த சூழல் வாய் - அவற்றைப் பின் தொடர்ந்த இடங்களில்; வாழும் ஏழையர் சிறுவலிக்கு - வாழ்கின்ற எளியோரின் அற்ப பலத்திற்கு; இராகவன் தனிமை வாள் அமர் தாழுமே - இராமனின் தனிப்பட்டு நின்ற நிலையிலுள்ள வீரம் கொடிய போரில் தாழ்வுபட்டு விடுமா? (விடாது). அண்டங்களிலும் கடல்களிலும் மலைகளிலும் வேறு எங்கும் வாழும் உயிரினங்களின் துணையில்லாமலே வெல்லும் ஆற்றல் கொண்டவன் இராமன் என்பதை இது காட்டும். இராமன் திறனைப் பின்னர் வாலியும் 'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ!' (4023) என்பதால் வெளிப்படுத்துவான். வாள் - கொடுமையைக் குறித்தது. முன்னரும் 'வாள் அரக்கன்' (கம்ப. 3322) என வந்துளது. ஏழும் என வந்தது முற்றும்மை. ஏழுமே என வந்த ஏகாரம் எண்ணுப் பொருள் கொண்டது. 6 |