3325. | 'பார் என, புனல் என, பவன, வான், கனல், பேர் எனைத்து, அவை, அவன் முனியின் பேருமால்; கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்? |
பார் என - பூமியும்; புனல் என - நீரும்; பவன(ம்) வான் கனல் பேர் எனைத்து அவை - காற்றும் வானமும் தீயும் எனப் பெயர் கொண்டவை எவ்வளவு உண்டோ அவை அனைத்தும்; அவன் முனியின் பேருமால் - இராமன் சினந்தவுடன் நிலை கெடும் ஆதலால்; கார் எனக் கரிய அக்கமலக் கண்ணனை - மேகம் போன்று கருநிறம் கொண்ட அந்தத் தாமரை போலும் சிவந்த கண்ணுடையவனை; யார் எனக் கருதி இவ்இடரின் ஆழ்கின்றீர் - யார் என்று எண்ணி இத்துன்பக் கடலில் அழுந்துகின்றீர்? மண் முதல் தீ வரை ஐம்பூதங்களையும் குறித்துப் பின் அவற்றையும் அடக்கி ஆளும் திறலுடையவன் இராமன் என வலியுறுத்திக் கூறினான் இலக்குவன். 'கமலக் கண்ணனைக் கையினில் காட்டினாள்' எனக் கரன் வதைப் படலத்திலும் இராமன் குறிப்பிடப்படுகிறான் (2889). அயோத்தியா காண்ட மந்திரப் படலத்திலும் 'புண்டரீகக் கண் புரவலன்' எனக் குறிக்கப் பெறுவான் இராமன் (1363). இங்குச் சீதைக்கு இராமனின் அவதார இரகசியத்தைக் கூறினான் எனலும் ஆம். என என்று முதலடியில் வந்தவை எண்ணுப் பொருளன. மூன்றாமடியில் வந்த என என்பது உவம உருபு. நான்காமடியில் வந்த என என்பது செயவென் எச்சம். 7 |