3326. | 'இடைந்துபோய் நிசிசரற்கு, இராமன், எவ்வம் வந்து அடைந்த போது அழைக்குமே? அழைக்குமாம் எனின், மிடைந்த பேர் அண்டங்கள், மேல, கீழன, உடைந்துபோம்; அயன் முதல் உயிரும் வீயுமால். |
இராமன் நிசிசரற்கு இடைந்து போய் - இராமன் அரக்கனுக்கு வலி ஒடுங்கிப், பின் வாங்கி; எவ்வம் வந்து அடைந்த போது அழைக்குமே - துன்பம் வந்து சேர்ந்த சமயத்தில் (பிறரைத் துணைக்குக்) கூப்பிடுவானோ? (மாட்டான்); அழைக்குமாம் எனின் - கூப்பிட நேருமானால்; மிடைந்த பேரண்டங்கள் மேல கீழன உடைந்துபோம் - நெருங்கிய பெரிய அண்டங்களெல்லாம் மேல் கீழனவாய் அழிந்து போய்விடும்; அயன் முதல் உயிரும் வீயும் - பிரமன் முதலான உயிர்களும் அழியும், ஆல் - ஈற்றசை. இடைதல் - தோற்றுப்போதல் என்றுமாம். நிசிசரன் - இரவில் சஞ்சரிக்கும் அரக்கன். அண்டப் பெருவெளியில் பல்வேறு உலகங்கள் நெருங்கியிருப்பதை 'மிடைந்த' எனச் சுட்டினான். எவ்வம் - துன்பம். இராமன் எல்லா அண்டங்களிலுள்ள எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் கலந்துள்ளவன் என்பதை முதலில் கூறினான் இலக்குவன். அதனால் அவனுக்கு ஒரு தீங்கு நேரிடின் எல்லாம் அழிந்திருக்கும்; அவ்வாறு அழியாததால் இராமனுக்கு எந்தத் தீங்கும் வரவில்லை என்பதை உணர்த்தினானாம். 8 |