3327.'மாற்றம் என் பகர்வது?
     மண்ணும் வானமும்
போற்ற, வன் திரிபுரம்
     எரித்த புங்கவன்
ஏற்றி நின்று எய்த வில்
     இற்றது; எம்பிரான்
ஆற்றலின் அமைவது ஓர்
     ஆற்றல் உண்மையோ?

    பகர்வது மாற்றம் என் - (இராமன் ஆற்றல் குறித்து) மேலும்
சொல்லும் வார்த்தை யாதுளது?; மண்ணும் வானமும் போற்ற -
மண்ணுலகும் விண்ணுலகும் புகழ; வன் திரிபுரம் எரித்த புங்கவன் -
வலிய மூன்று கோட்டைகளை எரித்த சிவபெருமான்; ஏற்றி நின்று
எய்த வில் இற்றது -
நாணேற்றி நின்று அம்பெய்யும் வில்லை
(சீதையின் திருமணத்தின் போது) முறித்திட்டது; எம்பிரான்
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ -
எம்
தலைவனாம் இராமனின் வல்லமையைக் காட்டிலும் பொருத்தமான ஒரு
வலிமை உள்ளதோ? (இல்லை).

     புங்கவன் - ஆண்களில் சிறந்தவன், காளை வாகனத்தை
உடையவன் என்றும் உரைப்பர். சிவபெருமான் கையிலெடுத்து
நாணேற்றிப் பகை வென்ற வலிய வில் இராமன் வலிமைக்கு
ஆற்றாமல் முறிந்தது. இதனைக் கண்ணாரக் கண்ட சீதை இராமனின்
ஆற்றல் பற்றி ஐயப்படக் கூடாது என்றும். அவளுக்குத் தான்
வேறென்ன சொல்ல இருக்கிறது என்றும் குறிப்பாகக் கூறினான்
இலக்குவன். இதனை 'மாற்றம் என் பகர்வது?' என்ற தொடர் சுட்டும்;
ஏதேனும் கூறின் அது மிகையாம் என்பதும் வெளிப்படும்.         9