3329. | 'பரக்க என் பகர்வது? பகழி, பண்ணவன் துரக்க, அங்கு அது பட, தொலைந்து சோர்கின்ற அரக்கன் அவ் உரை எடுத்து அரற்றினான்; அதற்கு இரக்கம் உற்று இரங்கலிர்; இருத்திர் ஈண்டு' என்றான். |
பரக்க என் பகர்வது - விரிவாக (யான் மேலும்) என்ன சொல்வது?; பண்ணவன் பகழி துரக்க - தலைவனாம் இராமன் அம்பினை எய்ய; அங்கு அதுபட - மான் சென்ற அவ்விடத்து அதன் மீது அவ்வம்பு தைத்த; தொலைந்து சோர்கின்ற அரக்கன் அவ் உரை எடுத்து அரற்றினான் - தன் ஆற்றல் அழிந்து வீழ்கின்ற அந்த இராக்கதன் இராமன் குரலில் கூறிய சொற்களை உரக்கக் கூவினான்; அதற்கு இரக்கம் உற்று இரங்கலிர் - அதற்காகக் கவலை கொண்டு வருந்தி அழ வேண்டாம்; ஈண்டு இருத்திர் என்றான் - இங்குக் கவலைப்படாது இருப்பீராக என்று இலக்குவன் கூறினான். பண்ணவன் - கடவுள், மேலோன். இராமன் எய்த அம்பு பட்டு மரிக்கும் அரக்கன் இறக்கும் போது வஞ்சகக் குரலால் கூறிய சொற்களை உண்மையாக நம்பி வருந்தி அழ வேண்டாம் எனத் தேற்றினான், இலக்குவன். தொலைந்து சோர்கின்ற என்ற தொடரைச் சோர்ந்து தொலைகின்ற எனப் பிரித்துப் பொருள் காண்பதுமுண்டு. 11 |