3331.'ஒரு பகல் பழகினார்
     உயிரை ஈவரால்;
பெருமகன் உலைவுறு பெற்றி
     கேட்டும், நீ
வெருவலை நின்றனை; வேறு என்?
     யான், இனி,
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென்,
     ஈண்டு' எனா,

    ஒரு பகல் பழகினார் உயிரை ஈவர் - ஒரு நாள் மட்டும்
பழகின வராயினும் அன்புடையோர் தாம் பழகியவர்க்காகத் தம்
உயிரையும் கொடுத்து உதவி புரிவர்; நீ பெருமகன் உலைவுறு பெற்றி
கேட்டும் வெருவலை நின்றனை -
(மாறாக) நீயோ இராமன்
அழிவடைந்தான் எனும் தன்மையைக் காதால் கேட்டும் அஞ்சாமல்
நின்றாய்; வேறுஎன் - இனி எனக்கு வேறு வழி யாது?; இனியான்
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா -
இனிமேல்
நான் தீயில் விரைந்து விழுந்து சாவேன் இவ்விடத்தே என்று கூறி...,
ஆல் - அசை.

     ஒரு நாள் பழகினும் உயிரை ஈயும் என்பதற்குக் குகன்இராமனுடன்
வனம் செல்லத் துணிந்தமை சான்றாகும் (1993).பெருமகன் - ஆண்களில்
சிறந்தோன். பகல் - நாள், 'ஒல்லைகொடாஅ தொழித்த பகலும் (நாலடி.
169) என வருதல் காண்க.                                   13