3332. தாமரை வனத்திடைத்
     தாவும் அன்னம்போல்,
தூம வெங் காட்டு எரி
     தொடர்கின்றாள் தனை,
சேம விற் குமரனும்
     விலக்கி, சீறடிப்
பூ முகம் நெடு நிலம்
     புல்லி, சொல்லுவான்:

    தாமரை வனத் திடைத் தாவும் அன்னம் போல் -
செந்தாமரைக் காட்டில் தாவிச் செல்லும் அன்னப் பறவை போல; தூம
வெங்காட்டு எரி தொடர்கின்றாள் தனை -
புகை கூடிய கொடிய
காட்டில் எரியும் தீயில் பாயும் சீதையை; சேமவிற் குமரனும் விலக்கி-
பாதுகாவலுக்குரிய வில்லேந்திய இலக்குவனும் தடுத்து; சீறடிப் பூ
முகம் நெடுநிலம் புல்லி(ச்) சொல்லுவான் -
(சீதையின்)
சிற்றடிகளாம் தாமரை மலர்களுக்கு எதிரே நெடிய தரையைத் தழுவி
வீழ்ந்து பின்வருமாறு கூறுவான்.

     காட்டுத் தீக்குத் தாமரையும் சீதைக்கு அன்னமும் உவமை.
காடெல்லாம் தீப்பற்றிய தோற்றம் தாமரைக் காடாகத் தெரிகிறது.
இதுபோன்றே யுத்த காண்ட மீட்சிப் படலத்திலும் 'நீத்த அரும்
புனலிடை நிவந்த தாமரை ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்' (10036) என வருதலையும் ஒப்பிட்டுணரலாம். சேம வில்
என்பது இராமன் சீதை ஆகியோர் நலத்தைப் பாதுகாக்கும் பணியை
மேற் கொண்ட வில் எனவும் ஆம். பெண்களின் அடி சிறிதாயிருப்பது
அழகுக்கடையாளம். சீதையின் திருவடிகளைத் தொடாமல் அவற்றின்
முன்னுள்ள நிலத்தில் இலக்குவன் வீழ்ந்து வணங்கியது அவனுடைய
தூய்மையை உணர்த்தும். குமரன் என்பது இளையவன் என்றும்,
சீதையிடம் கொண்ட, மகன் அன்பையும் குறிக்கும்.               14