3333. | 'துஞ்சுவது என்னை? நீர் சொன்ன சொல்லை யான் அஞ்சுவென்; மறுக்கிலென்; அவலம் தீர்ந்து இனி, இஞ்சு இரும்; அடியனேன் ஏகுகின்றனென்; வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ? |
துஞ்சுவது என்னை - (நீர்) இறத்தல் ஏன்?; நீர் சொன்ன சொல்லை யான் அஞ்சுவென் மறுக்கிலென் - நீர் கூறிய சொற்களை நான் கேட்டுப் பயப்படுகிறேன் உம் கட்டளையை மறுக்க மாட்டேன்; அவலம் தீர்ந்து இனி இஞ்சு இரும் - துன்பம் நீங்கி இங்கேயே இருங்கள்; அடியனேன் ஏகுகின்றனென் - அடியேன் செல்கின்றேன்; வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ - கொடிய கோபமுள்ள ஊழினை வெல்ல வல்லமையுடையவர்களோ நாம்? (அல்லோம்) துஞ்சுதல் - இறத்தல்; மங்கல வழக்கு. அவலம் - துன்பம். தீயிற் பாயச் சென்ற சீதையைத் தடுத்த இலக்குவன் 'நீர் இறப்பானேன்' என்றான். அவள் அடி வீழ்ந்த செயலாலும், தன் பணிவைக் காட்டினான். ஊழிற் பெரு வலியாவுள காண்க. இதே இலக்குவன் 'விதிக்கும் விதியாகும் என் விற்றொழில் காண்டி' (130) என்று கூறியது ஒப்பு நோக்கத்தக்கது. வெஞ்சினம் எனக் குறித்ததால் இது தீவினை எனப்படும். இங்கு என்பது 'இஞ்சு' என எதுகை நோக்கித் திரிந்த போலி. 15 |