3334.'போகின்றேன் அடியனேன்; புகுந்து
     வந்து, கேடு
ஆகின்றது; அரசன்தன்
     ஆணை நீர் மறுத்து,
"ஏகு" என்றீர் இருக்கின்றீர் தமியிர்'
     என்று, பின்
வேகின்ற சிந்தையான்
     விடைகொண்டு ஏகினான்.

    அடியனேன் போகின்றேன் - அடியேன் இப்போதே
செல்கின்றேன்; கேடு புகுந்து வந்து ஆகின்றது - பெரிய தீங்கு
வலிந்து நம்மிடம் வந்துள்ளது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து
ஏகு என்றீர் -
இராமன் எனக்கிட்ட கட்டளையை நீங்கள் கடந்து
என்னைப் 'போ' என்று சொல்கின்றீர்கள்; தமியிர் இருக்கின்றீர் -
துணையின்றித் தனியே இருக்கின்றீர்கள்; என்று பின் வேகின்ற
சிந்தையான் விடை கொண்டு ஏகினான் -
எனக் கூறிப்பின் துயரால்
வெந்து துடிக்கும் மனத்தையுடைய இலக்குவன் சீதையிடம் அனுமதி
பெற்றுச் சென்றான்.

     இராமன் சீதையைக் காக்குமாறு ஆணையிட்டது 'கான் இயல்
மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி' என்ற பாடலில் (3204)
தெரிகிறது. அதனை மீறுமாறு சீதை கூறுவதால் அதனால் வரும்
தீங்குக்கு அவளே பொறுப்பு என்பதை இலக்குவன் சுட்டினான்.
'எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு' (3331) எனக் கூறிய
சீதையின் மொழி இலக்குவனை இவ்வாறு செயல்படச் செய்தது ’நின்ற
நின்நிலை, இது, நெறியிற்று அன்று’ எனச் சீதை கூறிய சுடு
மொழியால் (3330) 'வேகின்ற சிந்தை யான்' ஆயினான், இலக்குவன்.   16