3335. | 'இருப்பெனேல், எரியிடை இறப்பரால் இவர்; பொருப்பு அனையானிடைப் போவெனே எனின், அருப்பம் இல் கேடு வந்து அடையும்; ஆர் உயிர் விருப்பனேற்கு என் செயல்?' என்று, விம்மினான். |
இருப்பெனேல் எரியிடை இவர் இறப்பர் - (சீதை கூறியவாறு போகாமல்) இங்கிருப்பேனாயின் தீயிலே பிராட்டியார் வீழ்ந்து சாவார்; பொருப்பு அனையானிடைப் போவெனே எனில் - மலை போன்ற இராமனிடம் செல்வேனாயின்; அருப்பம் இல் கேடு வந்து அடையும் - காவலில்லாத தீங்கு பிராட்டிக்கு வந்து சேரும்; ஆர்உயிர் விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் - அரிய உயிர் மீது ஆசையுடைய எனக்கு எச் செயல் செய்வது என எண்ணி ஏங்கினான். ஆல் - அசை. இராமனுக்கு மலை உவமை ஆகிறது. இதனை அருப்பம் - அற்பம் எனவுமாம் தடையுமாம். ஆருயிர் விருப்பனேன் என்பதால் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணும் எண்ணம் குறிப்பாகப் புலப்படுகிறது. இதனால் இலக்குவன் தன்னையே வெறுக்கும் மனநிலை உள்ளவன் என்பது தெரிகிறது.17 |