3336. | 'அறம்தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்; இறந்துபாடு இவர்க்கு உறும், இதனின் இவ் வழித் துறந்து போம் இதனையே துணிவென்; தொல் வினைப் பிறந்து, போந்து, இது படும், பேதையேன்' எனா, |
அறம் தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் - தருமத்தால் மட்டுமே அழிவு இல்லாமையை ஆக்குவது முடியும்; இறந்து பாடு இவர்க்கு உறும் - (சீதை விருப்பப்படி போகாமல்) நான் இங்கு (இருந்தால்) பிராட்டி இறந்து போவது உறுதி (ஆதலால்); இதனின் இவ்வழித் துறந்து போம் இதனையே துணிவென் - இவ்விடத்திலிருந்து செல்லும் இச் செயலைச் செய்யவே துணிவேன்; தொல் வினைப் பிறந்து போந்து இதுபடும் பேதையேன் எனா - பழவினையின் பயனாகப் பிறந்து இத்துன்பத்தை அடையும் அறிவிலாத நான் என எண்ணி, தருமம் சீதையைக் காப்பாற்றட்டும் என்ற நம்பிக்கை இலக்குவன் உள்ளத்தில் இருந்ததை இது காட்டும். நான் இருந்தால் இறப்பாள், எனவே இவ்விடம் விட்டு அகல்வதே நல்லது என இலக்குவன் துணிந்தான். சீதையைக் காவல் காத்து அண்ணன் ஆணை வழி நிற்பதா சீதை சொன்னபடி செல்வதா எனச் செய்வதறியாது திகைக்கின்றமையால் தன்னைப் ’பேதையேன்' என்றான். அறத்தின் காவலும் விதியின் வலிமையும் ஒருங்கே இலக்குவன் எண்ணத்தில் வெளிப்படுகின்றன. 18 |