3337.'போவது புரிவல் யான்;
     புகுந்தது உண்டுஎனின்,
காவல்செய் எருவையின்
     தலைவன் கண்ணுறும்;
ஆவது காக்கும்' என்று
     அறிவித்து, அவ் வழி,
தேவர் செய் தவத்தினால்
     செம்மல் ஏகினான்.

    யான் போவது புரிவல் - நான் செல்வேன்; புகுந்தது
உண்டெனின் -
(ஏதேனும் தீயது) நேர்வது உண்டானால்; காவல்
செய் எருவையின் தலைவன் கண்ணுறும் ஆவது காக்கும் -
காவல் புரிகின்ற கழுகரசன் சடாயு கண்டு தன்னாலியன்ற அளவு
பாதுகாப்பான்; என்று அறிவித்து - எனச் சீதையிடம் கூறி; செம்மல்
தேவர் செய் தவத்தினால் அவ்வழி ஏகினான் -
இலக்குவன்
தேவர்கள் செய்த தவத்தினால் (இராமன் மானைத் தொடர்ந்த) அந்த
வழியில் சென்றான்.

     'காவல் செய் எருவையின் தலைவன்' என்பது சடாயுவைச்
சுட்டும். சடாயு காண் படலத்தில் 'நீவிரும் நல்நுதல் தானும் இக்
காட்டில் வைகுதிர்; காக்கு வென் யான்' என்ற மொழிகள் (2727)
இதனை வலியுறுத்தும். இலக்குவன் சீதையைத் தனியே விட்டுச்
செல்லவும் அப்போது இராவணன் அவளைக் கவர்ந்து செல்லவும்
அதனால் அவனும் அவன் குலமும் மாளவும் செய்ததற்கு அடிப்படை
தேவர்கள் செய்த தவமாகும்.                                 19