3339. | ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்; சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்; பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என, வீணையின் இசைபட வேதம் பாடுவான். |
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் - உணவு இல்லாதவன் எனக் கூறும்படி வற்றிக் காய்ந்த உடலை உடையவனாயும்; சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய் கையன் - நெடுந்தூரம் நடந்து வந்தது போன்று பெருந்துன்பத்தை வெளிப்படுத்தும் செயலை உடையவனாயும்; பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என - தாளத்தால் வரையறுத்து இசைப் பாடலைப் பாடுபவன் போல; வீணையின் இசைபட வேதம் பாடுவான் - வீணை இசை போலச் சாம வேதப் பாடல் பாடுபவனாயும் ஆனான். ஊண் - உணவு. பாணி - கை; இங்குக் கையில் உள்ள தாளத்திற்கு ஆகுபெயராய் வந்தது. பாட்டு என்பாருமுளர். வேதம் எனக் குறிப்பிடினும் நான்கு வேதங்களில் பாடலிற் சிறந்தது சாமவேதம் ஆதலின் அதுவே கொள்ளப்பட்டது. வீணையின் இசைபட என்பதற்கு வீணை இசை ஒப்பாகாமல் கீழ்ப்படும் வகையில் எனவும் கொள்ளலாம். இராவணன் வேதத்தில் வல்லவன் என்பதை முன்னர் வந்த 'சொல் ஆய் மறை வல்லோய்' (3246) என்ற தொடரால் அறியலாம். பின்னரும் மந்திரத் தருமறை வைகு நாவினான்' (3359) என வரும் தொடரிலும் காணலாம். 21 |