3340. பூப் பொதி அவிழ்ந்தன
     நடையன்; பூதலம்
தீப் பொதிந்தாமென
     மிதிக்கும் செய்கையன்;
காப்பு அரு நடுக்குறும்
     காலன், கையினன்;
மூப்பு எனும் பருவமும்
     முனிய முற்றினான்.

    பூப் பொதி அவிழ்ந்தன நடையன் - பூவின் இதழ்கள்
மென்மையாக விரிந்தாற் போலும் நடையுடையவனாகவும்; பூதலம் தீப்
பொதிந்தாமென மிதிக்கும் செய்கையன் -
நிலம் நெருப்பால்
நிறைந்துள்ளது போலும் காலால் பட்டும்படாமலும் அடிவைத்து
நடப்பவனாகவும்; காப்பு அரு நடுக்குறும் காலன் கையினன் -
காக்க இயலாமல் நடுக்கங் கொண்ட கால்களையும் கைகளையும்
உடையவனாகவும்; மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான் -
முதுமைப் பருவமும் பிறர் கண்டு வெறுக்கும் வகையில்
முதியவனாகவும் ஆனான் (இராவணன்).

     பொதி - இதழ், அரும்பு மலர்கின்ற பொதியவிழ் வான் பூ
(குறுந். 330) பொதியவிழ் பூ மரம் (பெருங். 1.51.5) எனப் பிற
நூல்களிலும் 'பொதியினை நகுவன புணர்முலை' (75) என இந்
நூலிலும் வருவது காண்க. அரும்பு மலரும் போது மிக மெதுவாக
அவிழ்தல் போல மெதுவாக அடி எடுத்து வைப்பதைப் பிறரறியாமல்
நடப்பவன். குறுநடையும் குந்தி நடத்தலும் அந்தணர்க்கியல்பு என்பர்.
முதுமையைக் கண்டு பிறர் வெறுப்பதை 'ஊமனார் கண்ட கனவிலும்
பழுதாய் ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்' (பெரிய திருமொழி 1.1.3)
என்பதும் ஒப்பிடற்குரியது. முற்றிய மூப்பு தன்னையே வெறுக்கஎனவும்
அமையும். தீப் பொதிந்ததாமென என்பது தீப்பொதிந்தாமெனநின்றது.   22