3342.தோம் அறு சாலையின்
     வாயில் துன்னினான்;
நா முதல் குழறிட
     நடுங்கும் சொல்லினான்;
'யாவர் இவ் இருக்கையுள்
     இருந்துளீர்?' என்றான்-
தேவரும் மருள்தரத்
     தெரிந்த மேனியான்.

    தேவரும் மருள் தரத் தெரிந்த மேனியான் - விண்ணவரும்
மயங்கிட மாறுபட்ட தவ வடிவுடைய அந்த இராவணன்; தோம் அறு
சாலையின் வாயில் துன்னினான் -
குற்றமற்ற அந்தப் பன்ன
சாலையின் வாயிலைச் சேர்ந்தான்; நாமுதல் குழறிட நடுங்கும்
சொல்லினான் -
நாவின் அடி தடுமாறிக் குழறும்
சொல்லையுடையவனாகி; யாவர் இவ் இருக்கையுள் இருந்துளீர்
என்றான் -
யார் இந்தப் பன்ன சாலையில் இருக்கின்றீர் எனக்
கேட்டான்.

     தோம் - குற்றம். சாலை - தழைக் குடிசை, நாக்குழற நடுங்கிய
நிலை முன்னரே அறியும் வகையில் 'காப்பு அரு நடுக்குறும் காலன்,
கையினன்' (3340) என வருணிக்கப் பெற்றுள்ளது.

     தேவரும் மருள் தர எனக் கூறியதால் இவன் வஞ்சனைகளை
அறிந்த தேவர்கள் கூட ’இம் முதியவன் தான் இராவணன்' என
அறியாத வகையில் வேடம் அமைந்திருந்தது என்க.                24