சீதை வரவேற்றல்

3343.தோகையும், அவ்வழி, 'தோம்
     இல் சிந்தனைச்
சேகு அறு நோன்பினர்'
     என்னும் சிந்தையால்,
பாகு இயல் கிளவியாள், பவளக்
     கொம்பர் போன்று,
'ஏகுமின் ஈண்டு' என,
     எதிர்வந்து எய்தினாள்.

    தோகையும் அவ்வழி - சீதையும் அவ்வனத்தில்; தோமில்
சிந்தனைச் சேகுஅறு நோன்பினர் என்னும் சிந்தையால் -
குற்றமற்ற மனத்தையும் குற்றமற்ற விரதத்தையும் உடையவர் இவர்
எனும் எண்ணத்தால்; பாகு இயல் கிளவியாள் - தேன்பாகு போலும்
இனிய சொற்களை உடையவளும்; பவளக் கொம்பர் போன்று -
பவளக் கொம்பு போல, அழகை உடையவளுமான சீதை; ஈண்டு
ஏகுமின் என எதிர்வந்து எய்தினாள் -
'இங்கு எழுந்தருள்க' என்று
முன்னே வந்து இராவணக் கபட சன்னியாசியை வரவேற்க வந்தாள்.

     சேகு - குற்றம். தம்மில்லத்திற்கு வரும் துறவிகளை இன்சொற்
கூறி விருந்தோம்பும் பண்பு இல்லறத்தாரின் கடமை. இதனைக் காட்சிப்
படலத்தில் சீதை இராமனை எண்ணி 'விருந்து கண்டபோது என்
உறுமோ' எனக் கவலைப்படுவதால் (5083) நன்கு அறிய முடியும்.

     தோகை - மயில், சாயலாலும் நடையாலும் சீதைக்கு உவமை.
பாகு - சொல்லுக்கு உவமை. பவளக் கொம்பு - வடிவுக்கு உவமை.
பாகியல் கிளவி பவளக் கொம்பு இவை இயைந்து வந்த உவமை, இல்
பொருள் உவமையாம்.

     ஏகுமின் - உயர்வுப் பன்மை. பாகு இயல் - இயல் என்பது
உவம உருபு கொம்பர் - கொம்பு என்பதன் போலி. தோகை - உவம
ஆகுபெயர்.                                               25