3344.வெற்பிடை மதம் என
     வெயர்க்கும் மேனியன்,
அற்பின் நல் திரை புரள்
     ஆசை வேலையன்,
பொற்பினுக்கு அணியினை,
     புகழின் சேக்கையை,
கற்பினுக்கு அரசியை,
     கண்ணின் நோக்கினான்.

    வெற் பிடை மதம் என வெயர்க்கும் மேனியன் -மலையிடத்து
உண்டாகும் கல் மதம் போல வியர்வை பெருகும்உடலை உடையவனும்;
அற்பின் நல் திரைபுரள் ஆசை வேலையன்- அன்பினால் அலைகள்
புரண்டெழும் ஆசைக் கடலிடைப் பட்டோனும் ஆகிய இராவணன்;
பொற்பினுக்கு அணியிணை - அழகுக்கு அணிகலமாய் விளங்குபவளை;
புகழின் சேக்கையை - புகழுக்கு இருப்பிடமானவளை; கற்பினுக்கு
அரசியை -
கற்பு எனும் பண்பிற்கு அரசி போன்ற சீதையை; கண்ணின்
நோக்கினான் -
தன் கண்களால் பார்த்தான்.

     வெற்பு என்பதை மலை போன்ற யானை என ஆகு பெயராய்க்
கொண்டு யானை சிந்தும் மதத்தின் மேல் ஏற்றிக் கூறுவோரும் உளர்.
யானை உடலின் சில உறுப்புகளில் மட்டும் மதம் பெருகுவதால்
மலையில் பெருகும் சிலா சத்து எனும் தாதுப் பொருளாய்ப் பொருள்
கொள்ளப் பெற்றது. காமம் கடல் போலப் பெருகுதலில் ஆசை
வேலை என உருவகிக்கப் பெற்றது. இதனைக் 'காதல் தானும்
கடலினும் பெரிதே (நற். 166) எனவும், காமக் கடும் புனல் (குறள். 1134)
எனவும் வருதலால் அறியலாம். இங்கு பொற்பினுக்கு அணி என்று
குறித்தது போன்று முன்னர் மிதிலைக் காட்சிப் படலத்தில் 'அழகு
எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே' (513) என வந்துளது. பின்னர்
அனுமனும் 'கண்டனென் கற்பினுக்கு அணியை' (6031) என
இராமனிடம் கூறினான்.

     இது வரை சீதையை உருவெளியாக மனத்தால் கண்டிருந்த
இராவணன் ஊனக் கண்ணின் நோக்கினான் என்றார்.               26