3345. தூங்கல் இல் குயில் கெழு
     சொல்லின், உம்பரின்
ஓங்கிய அழகினாள்
     உருவம் காண்டலும்,
ஏங்கினன் மன நிலை யாது
     என்று உன்னுவாம்?
வீங்கின, மெலிந்தன,
     வீரத் தோள்களே.

    தூங்கல் இல் குயில் கெழு சொல்லின் - சோர்விலா நிலையில்
பாடும் குயிலின் இனிமை பொருந்திய சொற்களோடு; உம்பரின்
ஓங்கிய அழகினாள் -
தெய்வலோக மகளிரினும் சிறந்த அழகும்
உடைய சீதை; உருவம் காண்டலும் ஏங்கினன் மனநிலை யாது
என்று உன்னுவாம் -
திருவுருவைப் பார்த்ததும் ஏக்கம் கொண்ட
இராவணனின் மனத்தின் நிலையை எது என்று யாம் நினைப்போம்?;
வீரத்தோள்கள் வீங்கின மெலிந்தன - வீரத்தில் சிறந்த புயங்கள்
அவளைக் கண்ட மகிழ்ச்சியால் பூரித்துப் பின் அவளை அடைவதை
எண்ணி ஏங்கி மெலிந்தன. ஏ - ஈற்றசை.

     தூங்கல் - தாழ்ந்து சோர்தல். சீதையின் சோர்வுக்குக் காரணம்
மாரீசனின் மாயக் குரலால் இராமனுக்குத் தீங்கு நேர்ந்திருக்கும் என
எண்ணிய சோர்வு.

     கெழு - பொருந்துதல்; மிகுதியுமாம். உவமை உருபாகக்கொண்டும்
பொருளுரைப்பர். குரலின் இனிமையும் உடலின் அழகும்உணர்ந்த
இராவணனின் மனம் ஏங்கியது. உடலில் வீரத்தின் விளை நிலமாம்
தோள்கள் வீங்கிப் பின் மெலிவுற்றன. இவ்வாறு சோர்வு நீங்கிய
சீதையைக் கண்ட இராவணன் உடலாலும் மனத்தாலும் சோர்வுற்றுத்
தளர்ந்தான், புகழின் உச்சி எனவும் உரைப்பர். இதனால் சீதை
எந்நிலையிலும் இயற்கை அழகு குலையாதவள் எனலாம்.              27