3346.புன மயில் சாயல்தன்
     எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை
     முரலும் தும்பியின்-
இனம் எனக் களித்துளது என்பது
     என்? அவன்
மனம் எனக் களித்தது,
     கண்ணின் மாலையே.

    கண்ணின் மாலை - சீதையைக் கண்ட இராவணனின்
கண்களாகிய வரிசை; புன மயில் சாயல் தன் எழிலில் - காட்டில்
உலவும் மயிலின் சாயல் கொண்ட மேனி அழகில்; பூ நறைச் சுனை
மடுத்து உண்டு இசை முரலும் -
மலர்களின் தேன் நிறைந்த
சுனையில் சென்று அத்தேனைக் குடித்துப் பண் பாடும்; தும்பியின்
இனம் எனக் களித்துளது என்பது என் -
வண்டுகளின் கூட்டம்
போல மகிழ்ந்து மயங்கியது என்று கூறுவதில் என்ன பயன்?; அவன்
மனம் எனக் களித்தது -
இராவணனின் மனம் போல மகிழ்ந்தது
என்பதே பொருந்தும்.

     பூ - தாமரை மலர்கள் எனவும் கூறுவர். இராவணனின் இருபது
கண்களும் புறத்தே புலப்படவில்லை. எனினும் கண்ணுக்குப்
புலப்படாத அவன் மனம் கொண்ட மகிழ்ச்சியைச் சீதையைக்
கண்ணால் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியுடன் ஒப்பிடலாம். பொறிகளை
இயக்குவது மனம் என்ற உண்மையும் இங்குப் புலப்படும். சீதையின்
அழகு தேனாகவும் இராவணனின் கண்கள் அத் தேனைப் பருகி
மகிழும் வண்டாகவும் பொருந்தி நிற்கின்றன. சுமந்திரன் இராமனைக்
கண்டு மகிழ்ந்த நிலையைத் 'தன் கண்ணும் உள்ளமும் வண்டு
என(க்)களிப்புறக் கண்டான் (1362) எனவும் கூறப் பெற்றதை இங்கு
ஒப்பிட்டுக் காணலாம்.

     மயில் சாயல் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்தஅன்மொழித்
தொகை ஏ - அசை.                                          28